A- A A+     1800 - 425 - 31111
A- A A+ 1800 - 425 - 31111

சென்னை

அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.

அண்ணாநகர் கோபுரம்

முருகக் கடவுளைப்போல உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியதில்லை. நகரைப் பார்க்க தெருவெங்கும் சுற்றத் தேவையில்லை. அண்ணாநகர் கோபுரம் பூங்காவிற்குப் போய் வந்தால் போதும். இங்குள்ள கோபுரம்தான் நகரிலேயே உயரமும், பெரியதும் ஆகும். சுருள் வடிவில் அமைந்த படிக்கட்டுகளில் நடந்து செல்வதே ஒரு சுகானுபவம். அதன் உச்சியில் நின்று முழு நகரத்தின் அழகையும் பார்க்கலாம். இதுவொரு நிற்கும் விமானமாக நகரைச் சுற்றிக்காட்டும் அதிசயம். ஒத்தை ரூபாயில் ஊரைப் பார்க்கும் ஆனந்த அனுபவம்.

அமைவிடம்:- அண்ணாநகர் ரவுண்டானா அருகில், சென்னை 600 040. நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1. நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது.

பிர்லா கோளரங்கம்

பெரிய நூலரங்கம் உருவாக்கும் அறிவுத் தேடலை இந்த பிர்லா கோளரங்கம் எளிதாகத் தொடங்கி வைத்துவிடும். அறிவியல் நுட்பத்தை அருகிருந்து பார்க்கும் வசதி கொண்டது. அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் விண்வெளியைத் தொலைநோக்கியின் வழியே பார்த்துத் தெளியலாம். வானவெளி ஆச்சரியங்கள் குழந்தைகளின் விழித்திரைக்கு அருகிலேயே மாதிரி வடிவங்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. கேள்விகளில் துளைக்கும் குழந்தைகள் பார்வையின் வழியே பதில்களைப் பருகிப் போகலாம். குழந்தைகளின் மனவுலகின் ரகசியங்களுக்கு பிர்லா கோளரங்கம் அறிவுலக ஞானம் தருகிறது. கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகிலுள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இது செயல்படுகிறது.

நேரம்:- நிகழ்ச்சி நிரல் (ஆங்கிலத்தில்) காலை 10.45, மதியம் 1.15 மற்றும் 3.45. தமிழில் மதியம் 12 மணி மற்றும் 2.30 மணி.

நுழைவுக்கட்டணம் பெரியவர் ரூ.20. சிறுவர் ரூ.10. தொலைபேசி:- 24410025.

அமீர் மகால்

அரண்மனை என்ற சொல்லிற்கு சென்னைக்குள்ளேயே ஓர் அடையாளம் அமீர் மகால். ஆற்காடு நவாப்களின் கலைத் திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரம் ஒளிர அமைக்கப்பட்டிருக்கிறது.

1789 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1870 இல் ஆற்காடு அரச குடும்பத்தாரின் மாளிகை ஆயிற்று. நவாப் அரசர்களின் கலை மனங்களை இந்த மகாலின் கலையெழில் கொஞ்சும் தூண்களே சொல்லும். இங்கு வந்து பார்த்தவர்கள் பரவசம் கொள்ளாமல் திரும்பவே முடியாது. முஸ்லிம் மன்னர்களின் மனத்திற்குரிய மகாராணிகள் தம் கனவுகளை அடைகாத்த அந்தப்புரங்கள் இந்த மகாலில் இருக்கின்றன. கொஞ்ச நேரம் நீங்களும் ஒரு மன்னராக உலா வந்து பார்க்க ஒரு வசதி.

அமைவிடம் மகாகவி பாரதிசாலை, (பைகிராப்ட்ஸ் ரோடு) திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது. அனுமதி பெற்றுப் பார்வையிட வேண்டும். தொலைபேசி:- 28485861

கன்னிமாரா பொது நூலகம்

மர நிழல்கள் அடர்ந்த சோலைக்குள் இருக்கிறது கன்னிமாரா நூலகம். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கட்டடங்களில் குட்டி நகராகத் தோன்றும் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நூலகங்களில் ஒன்று. மிகப்பழமையான கட்டடத்தில் இயங்கும் நூலகம். நவீன வசதிகள் கொண்டது. தொடுதிரைக் கணினி நிறுவப்பட்டிருக்கிறது. இங்கு மிகப் பழமையான நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றக்கூடிய சூழல் அமையப் பெற்ற மிகப்பெரும் நூலகம். சென்னையின் பெருமைமிகு இடங்களில் இதுவும் ஒன்று.

அமைவிடம் பாந்தியன் சாலை, எழும்பூர் சென்னை-8. அனுமதி இலவசம். தேசிய விடுமுறை நாட்கள் விடுமுறை. பார்வையாளர் நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை. தொலைபேசி 28193751.

எலியட்ஸ் கடற்கரை

அதிகாலையையும் அந்தி மாலையையும் எலியட்ஸ் கடற்கரையில் நடந்தபடி ரசித்தாலே ஆயுளுக்கும் போதும். நீண்ட மணற்பரப்பும் வானம் தொடும் நீர்ப்பரப்பும் மனத்தில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கும். அருகருகே வேளாங்கண்ணி தேவாலயமும் அஷ்டலட்சுமி கோயிலும் எனக் கடலருகே சமரச சன்மார்க்கம். அலையடிக்கும் எலியட்ஸ் கடற்கரையில் ஆன்மிக காற்றும் வீசுகிறது. கொஞ்சம் காற்றை வாங்கிக் கொண்டே கொஞ்சும் கடலை ரசித்து வரலாம். இளமைக்கு ஏற்ற கடற்கரை இது. அமைதி விரும்பிகளுக்குத் திறந்தவெளி தியான மண்டபம். சென்னையின் தெற்குப் பகுதியில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது.

புனித ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் அகிலத்தையும் அரசாள நினைத்த அவர்கள் கட்டிய கோட்டைகள் இன்றும் நமக்கு அரசாண்ட நினைவுகளை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதிலொன்றுதான் புனித ஜார்ஜ் கோட்டை. கடற்கரையோரம் ஏதோ பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அன்று ஆங்கிலேயர்கள் ஆண்ட புனித ஜார்ஜ் கோட்டையில்தான் இன்று நமது ஜனநாயகம் மலர்ந்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியின் பழம்பெரும் நினைவுச் சின்னம். நாற்புறமும் அகழியுடன் அரைவட்ட வடிவில் இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் வடிவமைத்துள்ளார்கள். அகழிகளின் பாதைகளும் கோட்டைச் சுவர்களும் அழியாத காலத்தின் சுவடுகள். மாநில சட்டமன்றப் பேரவை தலைமைச் செயலகம் ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் உண்டு. இராபர்ட் கிளைவுக்குத் திருமணம் நடந்ததாகக் கருதப்படும் ஒரு தேவாலயமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.

அமைவிடம்:- புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். விடுமுறை:- சனி ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள். தொலைபேசி 25665566.

கோட்டை கொடிமரம்

கொடிகள் அசையும் காற்றசையும் மரங்களுக்கிடையில் கொடிமரங்களும் அழகுதான். புனித ஜார்ஜ் கோட்டையில் விண்ணைத் தொட முயற்சிக்கும் இந்தக் கொடிமரத்தை அண்ணாந்து பார்த்தால் கழுத்தைச் சுளுக்க வைக்கும். இதில் தினமும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறப்பது தனி அழகுதான். சுதந்திரத் தினத்தன்று மலர்கள் வானிலிருந்து தூவப்பட்டு, குண்டுகள் அதிர, தமிழக முதலமைச்சரால் கொடி ஏற்றப்படும் தருணம் பொன்னானது. அப்போது கொடி மேடை கம்பீரத்தில் மிளிரும். தொலைக்காட்சிகளில் பார்த்தது போதும். எல்லோரும் ஒருமுறை நேரில் சென்று கட்டாயம் பார்க்க வேண்டியது இந்தக் கொடிமரம்.

உயர் நீதிமன்றம்

நேப்பியர் பாலமும் உயர் நீதிமன்றக் கட்டடங்களும் திரைப்படம் தொலைக்காட்சிகளில் பார்த்து சலித்திருப்பீர்கள். நேரில் ஒருமுறை பார்க்கலாம் என்று மனத்தில் ஆசை முளை விட்டிருக்கும். சென்னை மாநகரின் மற்றொரு அடையாளமல்ல இது. மாபெரும் அடையாளம். உயர்நீதிகள் பிறக்கும் இடமான இது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம். 1892-ம் ஆண்டு இந்திய-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. பாரிமுனைக்கு அருகிலுள்ள இந்த வளாகத்தில்தான் சட்டக் கல்லூரியும் அமைந்துள்ளது. நீதிமன்ற கட்டடத்தின் சின்னச் சின்ன படிக்கட்டுகளிலும் கூட மரபார்ந்த கட்டடக்கலையின் மகத்துவங்களைப் புரிந்து கொள்ளலாம். வழக்குகள் இல்லாமலும் இந்த வளாகத்திற்குள் போய் வரலாம்.

பாரிமுனைக்கு அருகில் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு. வார நாட்களில் அனுமதி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி- 25210543.

சென்னைப் பல்கலைக் கழகம்

மெரினா கடற்கரைச் சாலையில் கல்விக்காக ஒரு கலங்கரை விளக்கம். எழில்மிகு கட்டடங்களின் மகுடமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம் 1857-இல் தொடங்கப்பட்டது. சிப்பாய்க் கலகம் என அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போராட்டத்தின் நெருக்கடியான ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியக் கல்வித்துறையில் முதன்மையான இடம் இதற்குண்டு. லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு இந்திய சட்டவியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சட்டம், மருத்துவம், அறிவியல், கலை என பல்துறைகளின் ஞானபீடமாக விளங்குகிறது. இதனுள்ளே உயர்கல்வியின் சல்லிவேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன. பலர் படித்த இடம். படிக்கும் இடம். நாம் பார்க்க வேண்டிய இடம்.

அமைவிடம்:- சேப்பாக்கம் அண்ணா நினைவகம் எதிரே, சென்னை - 600 005. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு.

கலா சேத்ரா

கலைகளின் சேத்ரம். விழுதுகளிறங்கிய பழமையான கலை ஆலமரம். பசுமையின் நிழலில் நாத லயங்களின் இசையில், நதிகளின் அசைவில் உங்களையே மறந்துவிடுவீர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் நிற்கும் நகரில்தான் நாட்டியமும், இசையும் நர்த்தனம் புரியும் இடமுமாக கலா சேத்ரா இருக்கிறது. இங்கு மரபும் பாரம்பரியமும், நவீனமும் சேர்ந்து நாளும் பொழுதும் கலைகள் வளர்கின்றன. கலைக்காகவே வாழ்ந்து மறைந்த ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் 1936-இல் தொடங்கப்பட்டது கலாசேத்ரா. பரதம் மற்றும் பிற நாட்டியங்களை தினம் கலைஞர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதை மீளுருவாக்கம் செய்யும் உயரிய நோக்குடன் திருமதி.ருக்மணி தேவி தொடங்கியிருக்கிறார். சுரங்க வகை கலைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மர நிழல்களின் கீழே திறந்த வெளியில் பழங்கால குருகுல முறையில் பல்கலைகளும் கற்பிக்கப்படுகிறது இதன் சிறப்பு. அதோ இசையின் அதிர்வுகள் காதில் விழுகின்றன.

அமைவிடம்:- திருவான்மியூர், சென்னை - 600 041. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 24521169.

கலங்கரை விளக்கம்

மெரினாவின் உயரமான ஆரம்பப் புள்ளியாக நிற்பது கலங்கரை விளக்கம். மீனவர்களின் வழிகாட்டியான இந்த நீண்ட நெடிதுயர்ந்த கலங்கரை கோபுரம் கடற்கரையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. தங்க மணற் பரப்புக்கு வாளிப்பான அழகை அள்ளி வழங்குகிறது. இந்த நிற்கும் நெடுமரம். இங்கிருந்து இரவில் சுழலும் ஒளிவிளக்கு வானத்து நிலவுக்குக்கூட வழி காட்டும். கடற்கரை வாசிகளுக்கு இது அழகின் அடையாளம். வழி தவறும் கட்டுமரங்களுக்கு இது ஒரு வழிகாட்டும் ஒளி மரம்.

அமைவிடம்:- காமராஜர் சாலை, மைலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி - 24985598

மெரினா கடற்கரை

தன்னைத் தேடி வந்தவர்களையெல்லாம் மடியில் வைத்துத் தாலாட்டும் வங்காள விரிகுடா கடல். நகர வாழ்வின் இறுக்கத்தைத் தளர்த்தி இளைப்பாற நினைப்பர்வர்களின் இலவசப் பூங்கா. மணற்பரப்பின் நீளம் 13 கி.மீ. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை இதுதான். நடக்க நடக்க காற்றின் சுகம் மெய்மறக்க வைக்கும். அதிகாலை நேரத்தில் மெரினா நடை மனிதர்களால் கலகலக்கும். 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வைக்கப்பட்ட தமிழறிஞர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் காவிய மாந்தர்களின் அழகிய வேலைப்பாடுமிக்க சிலைகள் கடற்கரையை அலங்கரிக்கின்றன. மெரினாவின் அடையாளம் உழைப்பாளர் சிலைத் தொகுப்பு. கூட்டுழைப்பு, ஊக்கம் உடலுழைப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் தீவிர கவனத்தில் மெரினாவின் அழகு கூடிக்கொண்டேபோகிறது. அலைகள் உரசும் கரையில் நின்றபடி கடலை பார்த்துக்கொண்டே இருக்கலாமே? காசா பணமா!

போர் வெற்றி நினைவுச் சின்னம்

கடற்கரை சாலையைக் கடந்து போகும்போது தீவுத்திடல் அருகில் உங்கள் கண்ணில் படும் இந்த நினைவுச் சின்னம். அதை ஏதோ கல்தூண் மண்டபம் என்று நினைத்து கடந்து விடாதீர்கள். நிதானம் காட்டி நின்று பாருங்கள். இங்கே நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் ஆன்மாக்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முதல் உலகப் போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும் பின்னர் இரண்டாம் உலகப் போரில் உயிர்த் துறந்த சென்னை ராஜதானியைச் சேர்ந்தவர்களின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ளது. வரும் தலைமுறைகளுக்காக காலத்தால் வரலாறு கரைந்து போகாமல் இருப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வருகையும் கூட ஒரு வரலாறுதான். சென்று பாருங்கள்.

அமைவிடம்:- காமராஜர் சாலை (கடற்கரைச் சாலை) தீவுத்திடல் அருகில், சென்னை - 600 009.

நேப்பியர் பாலம்

சென்னை என்றதும் மனத்தில் நிழலாடும் சித்திரங்களில் நேப்பியர் பாலமும் ஒன்று. அதன் வளைவுகள் விசித்திரமானவை. ஆங்கிலேயர்களின் கலைத் திறனில் பாலம் கூட ரசனை மிகுந்த படைப்பாக மாறியிருக்கிற அதிசயம் இது. மெரினா கடற்கரையிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் கூவம் ஆற்றைக் கடப்பதற்கான பாலம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869 ஆம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. முதலில் இது இரும்பு கிராதிகளால் ஆன ஒடுக்கமான பாலமாகத்தான் இருந்தது. பின்னர் 1943 ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் பொறியியல் ஆற்றலுக்குக் காலத்தால் அழியாத சான்றாக இப்பாலம் இருக்கிறது. அதேபோன்று இன்னொரு பாலமும் அதன் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.

வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை

சிறுவயது ஞாபகங்களில் ரயில் பயணங்களும், யானை பார்த்து ஆச்சரியப்பட்ட பொழுதுகளும் மறக்க முடியாதவை. ரயிலில் பயணம் செய்த நாம் அதன் வளர்ச்சியின் காட்சிக் கூடத்தைப் பார்க்காமல் இருந்தால் எப்படி? சென்னை பெரம்பூர் அருகே உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலை மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. உட்புறக் காட்சிக் கூடத்தில் எண்ணற்ற சிறு காட்சி அமைப்புகள் வகை மாதிரிகள், புகைப்படங்கள், அட்டவணைகள் ஆகியன இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. இளையவர் முதல் முதியவர் வரை இந்தக் காட்சிச் சாலை உற்சாகப்படுத்தி ஆர்வம் தரக்கூடியது. குழந்தைகள் பார்த்து ரசித்த ஒரு சில பொம்மை ரயில்கள் மட்டுமல்ல 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ரயில் பெட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்:- நியூ ஆவடி ரோடு, ஐ.சி.எஃப் பஸ் நிறுத்தம் அருகில், சென்னை - 600 038. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.5 சிறுவர் ரூ.3 விடுமுறை திங்கள் கிழமை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26146267.

ராஜாஜி மண்டபம்

நினைக்கும் போதெல்லாம் அதன் பிரமாண்டம் உங்களை சற்றே அசர வைத்துவிடும். நீண்ட அகலமான படிக்கட்டுகளும் பெருந்தூண்களும் ஆங்கிலேயர்களின் கட்டடக் கலை சாதனையை கண்கள் முன் விரிக்கின்றன. இம்மண்டபத்தின் விசாலமான பரப்பும் கலையழகும் பழங்காலத்திற்குப் பயணிக்க வைத்துவிடும். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக எழுப்பப்பட்டது இந்த மண்டபம். பல்வேறு சரித்திரச் சம்பவங்களின் மௌன சாட்சியாகக் கம்பீரம் காட்டும் இம்மண்டபம், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த இராஜாஜியின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. இது பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் இடங்களில் முக்கியமானதாக விளங்குகிறது. நீங்கள் கட்டாயம் பார்த்துப் பரவசப்பட வேண்டிய இடம் இது.

அமைவிடம்:- ஓமந்தூரார் அரசினர் தோட்டம். ஹிந்து நாளிதழ் கட்டட எதிர்ப்புறம், அண்ணாசாலை, சென்னை - 600 002. தொலைபேசி - 25365635.

ரிப்பன் மாளிகை

தும்பை பூ நிற தூய்மை நிறத்தில் பளபளக்கும் கட்டடம் ரிப்பன் மாளிகை. வெள்ளை நிறப்பெட்டிகளை அடுக்கியது போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்டது. இந்திய தன்னாட்சியின் தந்தை என்று போற்றப்படுகிற ரிப்பன் பிரபுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்றமும் அதன் ஆட்சிக் குழுவும் இம்மாளிகையில் இயங்குகின்றன.

அமைவிடம்:- பூங்கா மின் இரயில் நிலையம் எதிர்ப்புறம், சென்னை - 600 003. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு. தொலைபேசி - 25384510 - 25384670.

பிரம்மஞான சபை

தனிமையும் அமைதியும் தவழும் இடத்தில்தான் தத்துவம் பிறக்கும். விதையிலிருந்து உயிர்தெழுந்த பூமிப்பரப்பு முழுவதையும் விழுதுகளால் அரவணைத்து செழித்து நிற்கும் அடையாறு ஆலமரத்தைப் போலவே பழமையானது பிரம்மஞான சபை. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி சீமாட்டி மற்றும் கலோ ஆல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மதம் மற்றும் தத்துவம் சார்ந்த ஆய்வுகளுக்கானது. 1892 இல் அடையாறில் மரங்களடர்ந்த இயற்கைச் சூழல் அமைந்த இடத்துக்கு இச்சபை மாற்றப்பட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பசுமை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் இந்த ஆல விருட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் 40,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளன. இங்குள்ள நூலகம் பழம் பெருமைமிக்கது. பல அரிய நூல்கள் பாதுகாப்பில் உள்ளன. ஞானம் தேடும் மனிதர்களுக்கு இது ஓர் இயற்கையின் போதி மரம். இங்கு இளைப்பாறுவோர் எல்லாம் தத்துவ ஞானம் பெறுவார்கள்.

அமைவிடம்:- அடையாறு, சென்னை - 600 020. அனுமதி இலவசம். நேரம் காலை 8.30 முதல் 10 மணி வரை. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. ஞாயிறு விடுமுறை. தொலைபேசி - 24912474.