A- A A+     1800 - 425 - 31111
A- A A+ 1800 - 425 - 31111

காஞ்சிபுரம்

காஞ்சிக்குத் சென்றால் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்பார்கள் பாரம்பரிய பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற பட்டுத் தொழிலின் தலைநகரம். இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று. பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரியது. சோழ விஜயநகர முகலாயப் பேரரசர்கள் ஆண்ட பூமி. அறிஞர் அண்ணா பிறந்த ஊர். மதங்களின் கோயில்கள் கொண்ட நகரம். தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மொழியையும் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரி இங்குண்டு. சென்னை வரை நீள்கிறது இம்மாவட்டம்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்

குழந்தைகளின் மனவுலகில் சஞ்சரிக்கும் விலங்கினங்களை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பூங்கா. விலங்குகள் சுதந்திரமாய் நடமாடும் பிரமாண்ட அகழியை தூரத்திலிருந்து பார்க்கும் வசதி இங்குண்டு. சிங்கங்கள் நடமாடும் பகுதிக்குள் லயன் சஃபாரி என்ற பாதுகாக்கப்பட்ட சிற்றுந்துப் பயணம் இப்பூங்காவின் முக்கிய அம்சம். இங்கு சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. பாட்டரியில் இயங்கும் குட்டி புகைவண்டியில் அமர்ந்தபடி பூங்காவின் மொத்தப் பரப்பையும் கண்டு ரசிக்கலாம். கடல் உயிரினங்கள், தொல் விலங்குகள் பிரிவு, பறவைப் பண்ணை மற்றும் ஊர்வனப் பண்ணை என பல பிரிவுகள் உண்டு. இது சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

அமைவிடம் - வண்டலூர், சென்னை - 600 048. செவ்வாய் விடுமுறை. கட்டணம் ரூ.15. தொலைபேசி - 22397150.

அறிஞர் அண்ணா இல்லம்

தன் உரை வீச்சால், தனித்துவ அரசியலால் தமிழர்களின் 'அண்ணாவாக' மாறிய பேரறிஞர் அண்ணா பிறந்த வீடு. இந்தத் தொட்டில் 16.9.1980 முதல் அவரது நினைவில்லமாக மாற்றப்பட்டது. அண்ணாவின் உருவச்சிலை, வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய நிழற்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சாமான்யர்களின் தலைநகராக உயர்ந்த ஒரு சாமான்யரின் உள்ளம் உறங்கும் இல்லம்.

அமைவிடம் - 54, அறிஞர் அண்ணா தெரு, சின்ன காஞ்சிபுரம்.

செங்கல்பட்டு

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நகரம். இங்கு பழமையான விஜயநகர கோட்டை ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நகரின் மிகப்பெரிய கொளவாய் ஏரியில் படகுசவாரி செய்யும் அனுபவம் ஓர் உற்சாகக் கொண்டாட்டம்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின் பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிரிப்பு. தொலைபேசி - 27222084.

காஞ்சி காமகோடிப் பீடம்

இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித பீடம். காமகோடி பீடத்தில் அன்னை காமாட்சியின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீ சக்கரம் உள்ளது. பூஜைகள் மற்றும் படையல்கள் அனைத்தும் ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்

காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில் 1915இல் கட்டப்பட்டது. தொலைபேசி - 27222049.

கைலாசநாதர் கோயில்

சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற கோயில். காஞ்சியில் புகழ்மிக்க கோயில்களில் கைலாசநாதர் கோயிலும் ஒன்று. இங்குள்ள வரை உருமாதிரிகள் சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் காலத்தால் முற்பட்டவை. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசரால் ராஜசிம்ம பல்லவன் கட்டிய இக்கோயிலை பின்னர் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன் மறுசீரமைப்பு செய்தார். மூலவரான கைலாச நாதரைச் சுற்றி 58 லிங்கங்கள் அமைக்கபட்டுள்ளன. இறையருள் குடியிருக்கும் கலைக்கோயில் இது. காஞ்சி சென்றால் கைலாசநாதரைக் கைவிடாதீர்கள்.

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில்

சிற்பங்கள் செழீத்திருக்கும் கற்கோயில் காஞ்சியின் பெருமை. வரலாற்றில் நிலைக்கும் விதமாக நந்திவர்வ பல்லவன் தலைசிறந்த சிற்பிகளைக் கொண்டு செதுக்கிய கோயில். பிரதான பகுதிகளிலிருந்து சற்று உள்ளடங்கிய ஒரு குறுகிய பாதையின் இறுதியில் இந்த கலைக்கோயில் உள்ளது. வைகுந்த ஏகாதசி இரவில் பக்தர்கள் வழிபடும் முக்கியத்துவம் பெற்றது. இது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வைணவ ஆலயம் என்பதால் மதியம் மூடப்பட்டிருக்கும்.

காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சி நகருக்குப் பெருமைதரும் அம்மன் கோயில். அருள் வழங்கும் அருளாலயம். இங்கு அம்மனின் முன்புள்ள ஸ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக பாவித்து வழிபடுவது மரவு. ஆதி சங்கரர் உருவமும்கூட வணங்கப்படுகிறது. இந்தியாவின் மூன்று முக்கியத் தலங்களில் ஒன்றான இது, கோடி மன்னகர்களால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் மையப்பகுதியில் தங்கக் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாதம் 9 ஆவது சந்திர நாளில் நடக்கும் ரதோற்சவம் பிரசித்திப்பெற்றது.

வரதராஜப் பெருமாள் கோயில்

காஞ்சி நகரின் கடைசியில் ஹஸ்தகிரி குன்றில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரும்மாண்ட தோற்றம் கொண்டது. கலைநுட்பம் செழித்த நூறு தூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்க வளையங்கள் சங்கிலித் தொடராக நான்கு மூலைகளிலும் தொடர்வது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். இறையருள் தரிசனமும் கலையெழில் தரிசனமும் கிடைக்கும் பெருமாள் திருத்தலம். வெகு நேர்த்தியான ரதி-மன்மதன் குதிரை வீரர்கள் ஆகிய சிற்பங்கள் அணிகலன்களைப் போலக் காட்சியளிக்கின்றன. இங்கு வைகாசியில் நிகழும் கருடோத்சவம் காண பக்தர்கள் கூட்டம் திரளும்.

மதுராந்தகம் ராமர் கோயில்

ஏரியைக் காத்த ராமர் இவர். மதுராந்தகம் ஏரிக்கரையின் கீழே இந்தக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இலக்குவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கிறார்கள். ஏரியைக் காத்த ராமரின் மற்றொரு திருவுருவமான கருணாகரமூர்த்தியும் இங்கு உருக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து தெற்கே செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்திற்கும் இடையே மதுராந்தகம் உள்ளது.

சுன்னத் ஜமாத் ஜும்ஆ மஸ்ஜித்

இதுவொரு மதநல்லிணக்க மசூதி. ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பழமையான இந்த மசூதி ஆற்காடு நவாப்பால் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தவிர மற்றொரு மசூதியும் வைகுந்த பெருமாள் கோயில் அருகே உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள திருக்குளத்தை இஸ்லாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து பயன்படுத்தி மத நல்லிணக்கத்தின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களும் கோயிலின் பிரம்மோற்சவத்தில் பங்கெடுத்துச் சிறப்பிக்கிறார்கள்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

அம்மனின் தெய்வீகத் தோற்றத்தைக் காண்பதே பெரும் தரிசனம். மாங்காட்டில் அன்னை காமாட்சி தவக் கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். எப்போதும் பக்தர்கள் இக்கோயிலை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அமைவிடம் - மாங்காடு, சென்னை - 602101. தொலைபேசி - 262720563. நேரம் காலை - 8-1 மாலை 3-8 மணி வரை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்

இத்திருக்கோயிலில் கர்ப்பகிருகத்தில் பக்தர்களே நேரடியாக அர்ச்சனையும் பிரார்த்தனையும் செய்யலாம். இது கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் ஆலயம். இங்கு வரும் பக்தர்கள் ஒரே தாய் ஒரே குலம் என்று ஆதிபராசக்தி அம்மன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இங்கு வந்து அனைத்து மதத்தினரும் வழிபடலாம். முப்பது ஆண்டுகளில் ஊரும் கோயிலும் உலகம் மெச்ச வளர்ந்துள்ளன. பக்தி வளர்க்கும் ஊர் சகல வசதிகளோடும் உயர்ந்து நிற்கிறது.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

மிகப்புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில். தாமரைப்பூ வடிவ கருங்கல் மேடையில் ஒரே கல்லில் 32 அடி உயரத்தில் வடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்குள்ளது. நாடிவரும் பக்தர்களுக்குப் பக்திப் பரவசம் தரும் தெய்வீக ஆலயம்.

குன்றத்தூர்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் முருகன் கோயில் இங்குதான் உள்ளது. பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊர். இவர் கட்டிய கோயில்தான் இங்குள்ள நாகேஸ்வரர் கோயில். இங்கு இராமன் அனுமனின் சிலைகளும் பழைமையான விஷ்ணு கோயிலும் உள்ளது.

சிங்கப்பெருமாள் கோயில்

பாதி சிங்க உருவமாகவும், பாதி மனித உருவமாகவும் தோற்றம் கொண்டு மகா விஷ்ணு 6 அடி உயரத்தில் சிங்கப்பெருமாளாக வீற்றிருக்கிறார். நரசிம்ம கோலத்தில் மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள இக்கோயில் தமிழ்நாட்டிலுள்ள நரசிம்மர் கோயில்களில் முக்கியமானதாகும். மலைமீது செவ்வண்ணத்தில் காட்சியளிக்கும் சிங்கப்பெருமாள் கோயில் பாடலாற்றி எனவும் அழைக்கப்படுகிறது.

திருப்பெரும்புதூர்

விசிஷ்ட்டாத்வைதம் கண்ட மகான் ஸ்ரீராமானுஜர் பிறந்த மண். அந்தணர் குலத்தில் தோன்றிய அவர் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடினார். இதன் பொருட்டு அவருக்குத் தெரிந்த வழியில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டார். மகாகவி பாரதியின் ஆதர்சமாக விளங்கிய பெருமை ராமானுஜருக்கு உண்டு. இங்குள்ள பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சென்னை - காஞ்சிபுரம் சாலையில் 29 கி.மீ. பயணித்தால் திருப்பெரும்புதூரை அடையலாம்.

ராஜிவ் காந்தி நினைவிடம்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவாக எழுப்பப்பட்ட நினைவாலயம். நெடிதுயர்ந்த தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணில்தான் அவர் 21.5.1991 இல் படுகொலை செய்யப்பட்ட சோகம் நிகழ்ந்தது.

செயிண்ட் தாமஸ் மவுண்ட்

இது பெரிய மலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் புனித தோமையரின் நினைவாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இம்மலைக்குப் பின்னால் ஒரு ரத்தம் சொட்டும் கதை இருக்கிறது. புனித தோமையர் தானே கல்லில் செதுக்கிய சிலுவையை வைத்து பிரார்த்தனை செய்துவந்தார். ஒருநாள் பிரார்த்தனையில் இருந்தபோது மன்னர் ராஜாமகாதேவனின் ஆட்களில் ஒருவன் பின்புறம் இருந்து அவரின் முதுகில் ஈட்டியால் குத்தினான். தோமையர் தன் கடைசி சொட்டு ரத்தம் மண்ணில் சிந்தும் வரை ஏசுவின் திருநாமத்தை உச்சரித்தபடி மண்ணில் ஆவியை விட்டார் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள லேடி ஆஃப் எக்ஸ் பெக்டேஷன் தேவாலயம் சீரமைக்கப்பட்டபோது அவர் வணங்கி வந்த சிலுவை ரத்தம் ஒழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாம். புனித தோமையர் தீட்டிய புனித மாதாவும் குழந்தை ஏசுவும் உள்ள அற்புதமான ஓவியம் ஒன்றை இத்தேவாலயத்தில் தரிசிக்கலாம்.

திருப்பருத்திக்குன்றம்

சமண சமயம் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்குள்ளன. இப்பகுதி சமணக் காட்சி என்று அழைக்கப்படுகிறது. பாலாற்றங் கரையில் அமைந்துள்ள திருப்பருத்திக்குன்றமும் சற்றுத் தள்ளியுள்ள பிள்ளையார்பாளையமும் காஞ்சிபுரத்தின் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றவையாகும. பகவான் மகாவீரரின் பேருருவச் சிலைகளும், சுவரோவியங்களும் இங்கே தீட்டப்பட்டுள்ளன.

திருப்போரூர்

போரியூர், யூதபுரி, சமரபுரி என்றெல்லாம் சொன்னால் யாருக்கும் புரியாது. இவையெல்லாம் திருப்போரூரை அழைக்கும் பெயர்களே. தமிழகத்தின் புகழ்பெற்ற 33 முருகன் கோயில்களில் ஒன்று. பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலை தரிசிக்க செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீயும் சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவும் பயணம் செய்ய வேண்டும். பக்திக்கு தூரங்கள் பெரிதல்ல.

திருநீர்மலை

ஒரு சிறு கிராமம் வைணவக் கோயிலால் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயில் பிற்காலச் சோழர் காலமான கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் கோயில்களின் வகை மாதிரியை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. திருநீர் மலைக் குன்றில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயில் மிகவும் அழகு நிறைந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நாடி வருகிறார்கள். தொலைபேசி - 22385484.

திருக்கழுக்குன்றம்

தமிழகத்தின் பிரசித்திபெற்ற வேதகிரிஸ்வரர் கோயில் இங்குள்ளது. மூலவருக்கு வழங்கப்படும் திரு.அமுது கருடனுக்கு வழங்குவதாகப் பாவித்துக் கழுகுகளுக்குப் படைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றம் ஊரின் பெயர்க் காரணம் இதுவே. செங்கல்பட்டு மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது.

உத்திரமேரூர்

பழந்தமிழர் வரலாற்றின் பக்கங்களில் உத்திரமேரூர் உச்சத்தில் இருக்கிறது. குடவோலை முறை என்று வரலாற்று ஆய்வாளர்களால் புகழப்படும் தமிழர்களின் மக்களாட்சி முறைக்கான ஆதிகாரப்பூர்வமான கல்வெட்டு ஆவணம் இங்குதான் கண்டெடுக்கப்பட்டது. இந்த அரசியல் சாசனக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் நடைமுறைகள் தமிழர்களின் ஜனநாயகப் பண்பாட்டை நிறுவுகின்றன. இங்கு சிற்ப சாத்திரத்தின்படி கட்டப்பட்டசிவன் கோயிலும் பல அடுக்கு விஷ்ணு கோயிலும் உள்ளன.

வல்லக்கோட்டை முருகன் கோயில்

வல்லக்கோட்டை முருகனுக்கு வல்லமை அதிகம். தமிழகத்திலேயே உயரமான முருகப்பெருமானின் 7 அடி திருவுருவச் சிலை இங்குதான் உள்ளது. அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலம். திருப்புகழில் ஏழு பாடல்கள் வல்லக்கோட்டை முருகனின் ஆண்டவர் கோயில் என்ற இன்னொரு பெயரும் உண்டு. திருப்பெரும்புதூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் தாம்பரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்

ஊரெல்லாம் தெரிந்த பெயர் கல்பாக்கம். இங்கு 1971 இல் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. அணுக்கதிர்வீச்சு தொழில் நுட்பத்தின் படிநிலைகளை ஆராயவும் இம்மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள ஃபாஸ்ட் ப்ரிடர் கதிரியக்கச் சோதனை என்பது பிளாட்டினம், யுரேனியம், கார்பைடு எரிவாயுக்களின் கலவையை அடிப்படையாகக்கொண்டு சோதிக்கப்படுகிறது. காமினி ரியாக்டர், யு 233 எரிபொருளை வெற்றிகரமாகப் பயன்படுத்தும் செயல் நிலையில் உள்ள உலகின் ஒரே ரியாக்டர் என்ற பெருமையைப் பெறுகிறது. இவையெல்லாம் தொழில்நுட்பத் தகவல்கள். நேரில் சென்றால் அதன் அனுபவமே தனிதான்.

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் என்றதுமே மனத்துக்குள் பறவைகள் சிறகடிக்கத் தொடங்கிவிடும். கண்டம்விட்டு கண்டம் தாவி பறந்துவரும் பல்வேறு பறவைகளைக் கண்டுமகிழலாம். இந்தியாவின் பெரிய நீர்ப்பறவை சரணாலயங்களில் இதுவும் ஒன்று. அக்டோபர் - மார்ச் மாதங்களில் கொக்கு, கடற்பறவை, மீன்கொத்தி மற்றும் செந்நாரை இனங்கள் சர்வதேச நிலப்பகுதிகளிலிருந்து இங்கு வருகின்றன. வேடந்தாங்கல் ஏரிக்கரையில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பறவைகளின் பரப்பைப் பார்த்து ரசிக்கலாம். பறவைகளின் ஒலியும் சிறகசைக்கும் அழகும் ரசனையான அனுபவங்கள். நீங்கள் குழந்தைகளுடன் செல்லவேண்டிய இடம்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் கட்டடக் கலையின் அருங்காட்சியகம். திறந்தவெளிச் சிற்பம் குடை வரைக் கோயில் ஒற்றைக் கல் சிற்பங்கள் ஒரே இடத்தில் இருக்கும் அற்புதம். வங்கக் கடலோரத்தில் ஒரு கற்கோயில் அதிசயம். மணற்பரப்பில் எழுந்து நிற்கும் வரலாற்று மகத்துவம். மாமன்னன் மகேந்திர பல்லவன் படைத்தளித்த கலைச்செல்வங்கள் உயிர்ப்புடன் அழகு மிளிர நிமிர்ந்து நிற்கின்றன. வரலாற்றின் ஆவணமாக இருக்கிறது மாமல்லபுரம். சிற்ப இணைப் பாக்கத்திற்கு உலக அளவில் சவால்விடும் மகிசாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி இங்குதான் உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் பயணிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சிற்பங்கள் கொழிக்கும் கடற்புரம். கற்கோயில்கள் நிறைந்த மாமல்லபுரம்.

அர்ஜுன தவம்

இந்தத் தவத்தை மட்டும் யாராலும் கலைக்கமுடியாது. உலகளவில் தொகுப்பு சிற்ப அடிப்புற இணைப்பாக்கத்தில் இதுவே மிகப்பெரியது. மிகப்பெரிய திமிங்கல வடிவப் பாறையில் கடவுளர்கள், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் என மனம் கொள்ளை கொள்ளும் சிற்பங்கள். இந்தச் சிற்பப் பாறை 27 மீ x 7 மீ அளவு பரப்புடையது. ஒருமுறைதான் சிற்ப அழகில் மயங்கி வாருங்களேன்.

பஞ்ச ரதங்கள்

இதுவொரு ஒற்றைக்கல் அழகு. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து கோயில்கள். வெவ்வேறு பாணிகள். இவையே பஞ்ச ரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ரதங்களின் கற்சுவர்களில் மிகவும் நேர்த்தியுடன் கூடிய கடவுள்கள், பெரிய உருவச் சிலைகள் போன்றவை கலைநயத்துடன் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கடற்கரைக்கோயில்

திராவிட கட்டடக் கலை பாணியில் வடிவாக்கம் பெற்ற முதல் வரிசைக் கோயில்களுக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு. தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான இது, அலைவாய்க் கரையில் கம்பீரமாக நிற்கிறது. கற்காளைகள் பதிமூன்றும் அரணாக அமைந்துள்ளன. இக்கோயிலை அழகுமிகு சிற்பமாக செதுக்கியவன் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்ட ராஜசிம்மன். இங்கு சிவன் விஷ்ணுவுக்குமாக இரு கோயில்கள் உள்ளன. இரவிலும் கண்டுகளிக்க மின்விளக்குகள் பளீரிடும்.

குகைக் கோயில்கள்

மாமல்லபுரம் சென்றுவிட்டு குகைக் கோயில்களைப் பார்க்காமல் திரும்ப முடியுமா? நேர்த்திக்கும், சிற்ப அழகிற்கும், ஒப்பனைக்கும், எளிமைக்கும் இக்கோயில்கள் காலத்தால் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில் மரபில் 13 குகைக் கோயில்களுக்கும் மேல் உள்ளன. முதல் கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டியதாகும். கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகியன குறிப்பிடத்தக்க குகைக் கோயில்கள்.

மஹிசாசுரமர்த்தினி குகை

என்ன வார்த்தை கொண்டும் இச்சிற்பத்தைப் படைத்த கலைஞனைப் பாராட்டலாம். இக்குகைக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பிரபஞ்ச உறக்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் பிரபஞ்ச உறக்கக் காட்சி நிச்சயம் நம்மை மந்திரத்தால் கட்டுண்ட நிலைக்குக் கொண்டு செல்லும். இதுவொரு சிற்ப சாதனை.

கிருஷ்ண மண்டபம்

இதுவொரு சிற்ப மண்டபம். இதன் கற்சுவர்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சிற்பத் தொகுப்பு உள்ளது. கிருஷ்ணருடன் அவர் காத்தருளும் மனிதர்கள், புல், பூச்சியினங்களும் வடிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா செல்லும் நண்பர்கள் இம்மண்டபத்திற்கு ஒரு சிற்றுலா சென்று வாருங்கள்.

கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை

நான்குபேர் சேர்ந்து தள்ளினால் உருண்டு வருவது போலத் தோன்றும் தோற்றமே இப்பாறையின் அழகு. அப்படி எளிதில் தள்ள முடியாது என்பதுதான் உண்மை. இதனால் இப்பாறையைப் பற்றி பல மாயக்கதைகள் உலவுகின்றன. இப்பாறை ஒரு சிறு பாறாங்கல் மீது நிற்கிறது. கண்ணனின் வெண்ணெய் உருண்டை என்ற பெயரும் இதற்குண்டு.

சிற்பக் கல்லூரி

சிற்பங்களுக்கு பஞ்சமில்லாத ஊரில் சிற்பக் கலையை கற்றுத்தரும் ஒரு கல்லூரி இருப்பது எத்தனை பொருத்தம். இங்கு சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயில் கட்டடக்கலை, கோயில் கலைப்பணி, சிற்பக்கலை ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. ஒரு கலைக்காட்சிக் கூடமும் இங்குள்ளது.

புலிக்குகை

புலி இல்லாத ஒரு குகை கடலுக்கு மிக அருகில் அமைந்திருந்தாலும் இங்கே அப்படியொரு அமைதியைப் பருகலாம். மாமல்லபுரத்தின் பிரதான சிற்பத் தொகுதிகளிலிருந்து 4 கி.மீ. பயணித்தால் இந்தக் குகையை அடையலாம். கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு தனித்துவம். பல்லவர்கால கலாச்சார நிகழ்வுகள் அரங்கேறுவதற்குரிய ஒரு திறந்தவெளி அரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. பல பழங்காலச் சிற்பங்களும் உள்ளன.

வராக குகை

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிறிய மண்டபம். இங்கே நான்கு பிரிவுகளில் நிற்கும் துவாரபாலகர்கள் அழகே தனிதான்.

திறந்தவெளி அருங்காட்சியகம்

புராதன மற்றும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் நிறைந்த நவீன திறந்தவெளி அருங்காட்சியகம். கற்சங்கிலி, அலங்காரச் சக்கரங்கள் மற்றும் பிற சிற்பங்களின் தொகுப்பாகக் காட்சியளிக்கிறது. கடற்கரைக் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் காட்சியகம் முற்காலக் கலைக்கும் தற்காலக் கலைக்கும் ஒரு பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலைப் பங்களிப்பை வெளிக்காட்டும் அரிய காட்சியகம்.

மாமல்லபுரம் சுற்றிடங்கள்

ஆலம்பாறைக் கோட்டை

நவாப்புகள் கட்டிய சிதைந்த கோட்டை சிதைவே பேரழகைக் கொண்டுள்ளது. இங்குள்ள கழிமுகக்துவாரமும் குளிர்ந்த மணல் வெளியும் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிய சூழலை வழங்குகின்றன. இந்தக் கோட்டையை அடைய மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. பயணிக்க வேண்டும்.

முதலைப் பண்ணை

ரோமுலெஸ் விட்டேகர் என்ற வெளிநாட்டவரால் தொடங்கப்பட்டது இந்த முதலைப் பண்ணை. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பலவகையான முதலைகள் மற்றும் பெரும் அலகு முதலைகள் காணப்படுகின்றன. குழந்தைகள் பார்த்து வியக்கும் பண்ணை இது. சென்னையிலிருந்து 44 கி.மீ. தொலைவில் வடநெம்மேலி கிராமத்தில் இருக்கிறது. இங்கு மணிக்கொரு முறை பாம்பிலிருந்து விஷம் எடுக்கும் விதம் பார்வையாளர்களுக்கு நிகழ்த்திக் காட்டப்படுகிறது. நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. கட்டணம் பெரியோர் ரூ.10. சிறுவர் ரூ.5. தொலைபேசி - 27472447

சோழமண்டலம் ஓவிய கிராமம்

தமிழ் ஓவிய சிற்பக் கலையுலகின் தலைசிறந்த கலைஞர்களான பணிக்கர், தனபால், கன்னியப்பன், ஆதிமுலம், ராமானுஜன் போன்றவர்களின் முயற்சியால் உருவானது சோழமண்டலம் ஓவிய கிராமம். ஓவியம், சிற்பம், கவின் கலை படைப்பாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டது இந்தக் கலைக் கிராமம். கலைஞர்கள் இங்கு தங்கி படைப்புகளை உருவாக்கலாம். காட்சிப்படுத்தலாம். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. படைப்பாளிகள் வாழும் இடம். கலைகள் மலரும் இடம். இங்கு விடுமுறை என்பது கிடையாது.

அமைவிடம் - சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கம், சென்னை - 41. கட்டணம் இல்லை. விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. தொலைபேசி - 24490092.

கோவளம் கடற்கரை

இதுவொரு சிறு மீன்பிடி கிராமம். இங்குள்ள பழமையான கோட்டை ஒன்று ஆடம்பர வசதி கொண்ட கடற்கரை வாழிடமாக மாற்றப்பட்டுள்ளது. அலைகள் உரசும் கடற்கரையில் காற்று வாங்கவும் நீந்தி மகிழவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு தர்காவும் பழமையான தேவாலயமும் உள்ளது. சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவு சென்றால் கோவளம் அடைய முடியும்.

முதலியார்குப்பம் படகு சவாரி

மழை நீரிலேயே காகிதப் படகுவிட்டு மகிழ்ச்சி கொண்டவர்கள் நாம். படகு சவாரி என்றால் விட்டுவிடுவோமா? உல்லாசப்படகு சவாரிக்கு உன்னதமான இடம் முதலியார் குப்பம். மிதிபடகுகள், அதிவேகப் படகுகள், மற்றும் இசைப் படகுகளில் பயணித்து மகிழலாம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் செல்லும் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது இந்தப் படகு இல்லம். சென்னையிலிருந்து 92 கி.மீ. மாமல்லபுரத்திலிருந்து 36 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. நேரம் காலை 10 முதல் மாலை 6 மணி வரை.

தட்சிணசித்ரா

பழமையைக் கொண்டாடும் நவீன அருங்காட்சியகம். கலை வேலைப்பாடுகள் மிகுந்த வீடுகள், அழகுமிளிரும் கலைப் பொருட்கள், புராதன கட்டடக் கலை என கண்டு ரசிக்கக் காட்சிகள் ஏராளம். இங்கு நடத்தப்படும் பண்டிகைகள், கலை நிகழ்வுகள் வாயிலாக தமிழகத்தின் பண்பாட்டை உணர்ந்து கொள்ளலாம். தட்சிணசித்ரா சென்னை கைவினைப் பொருள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அமைவிடம் - முட்டுக்காடு கிழக்கு கடற்கரைச் சாலை. கட்டணம் - பெரியோர் ரூ.50. சிறுவர் ரூ.25. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. செவ்வாய் விடுமுறை. தொலைபேசி - 24918943 - 24462435.

முட்டுக்காடு படகுக்குழாம்

ஒருநாள் போதுமா? ஒரு முழு நாளையும் இங்கே தண்ணீரில் மிதந்தபடி ரசிக்கலாம். காற்றோட்டப் படகு, துடுப்புப் படகு, கூரை வேயப்பட்ட படகு, மிதி படகு, ரோ படகு என படகுகள் பலவிதம் அதேபோல அனுபவமும்தான். சென்னைக்கு அருகிலுள்ள படகுக் குழாம். குடும்பத்தோடு வந்து குதூகலிக்க சிறந்த இடம். இங்கு நீர்விளையாட்டுகள் நடத்தலாம். புதிய படகு ஓட்டுநர்களுக்குப் பயிற்சியும் செய்முறை விளக்கமும் உண்டு. தொலைபேசி - 27472369.

நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் திருவிடந்தை

மணமாகாதவர்கள் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளை தரிசித்தால் விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. திருமங்கை ஆழ்வாரின் இனிய பாசுரங்களால் பாடல்பெற்ற தலம். வைணவக் கோயில்களில் முக்கியமான 108 திருப்பதிகளில் இக்கோயிலும் ஒன்று. ஆனிமாதத்தில் கருட சேவையும், ஆடியில் பூரம், வைகாசியில் வசந்த விழாவும் முக்கிய நிகழ்வுகளாகும். செல்வக் கடவுளான லஷ்மி பெருமாளின் இடப்புறம் வீற்றிருப்பார். அதனால் இவ்விடம் திரு இடத்து எந்தை என்றழைக்கப்பட்டு திருவிடந்தை என மருவியுள்ளது.

அமைவிடம் - சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நேரம் காலை 6-1. மாலை 3-8 மணி வரை . தொலைபேசி - 27472385.

நாட்டியத் திருவிழா

மாமல்லபுரம் நாட்டியத்திருவிழா:- டிசம்பர் கடைசி மற்றும் ஜனவரி தொடக்க நாட்களில் நடைபெறும்.

பிரம்மோத்சவம் - காஞ்சி வரதராஜபெருமாள், மே மாதம்

கருட சேவை - காஞ்சி வரதராஜபெருமாள், ஜூன் மாதம்.

தெப்பத்திருவிழா - காஞ்சி வரதராஜபெருமாள், பிப்ரவரி, நவம்பர் மாதங்கள்.

காமாட்சி அம்மன் திருவிழா - பிப்ரவரி மாதம்.

மகா சிவராத்திரி திருவிழா - கைலாசநாதர் கோவில், பிப்ரவரி மாதம்.

பங்குனி உத்திரம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில் மார்ச் - ஏப்ரல் மாதம்.