A- A A+     1800 - 425 - 31111
A- A A+ 1800 - 425 - 31111

சேலம்

மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம். தமிழ் சினிமாவின் தொடக்கக்காலத்தில் முக்கியமான பங்காற்றிய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சேலத்தில்தான் இருந்துள்ளது. மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

மேட்டுர் அணைக்கட்டு

தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும். இங்குள்ள மேட்டுர் நீர்மின் உற்பத்தி நிலையம் மிகவும் பெரியதாகும். இங்குள்ள பூங்கா, மலைப்பகுதி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தொலைபேசி: - 04298-242200.

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்

இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 x164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர வெயில் நுழைந்து கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலை மீது விழும்.

ஜமா மசூதி

நகரத்தின் இதயப் பகுதியான மணிமுத்தாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த மசூதி. மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டப்பட்ட பழம்பெரும் மசூதி இது. தொலைபேசி: - 0427-2267227.

சங்ககிரி கோட்டை

சங்ககிரி மலைமீது அமைந்துள்ள இந்த மாபெரும் கோட்டைக்குள், 6 நடைபாதைகள், 5 கோயில்கள், 2 மசூதிகள் உள்ளன. திப்புசுல்தானும், தீரன் சின்னமலையும் பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களும் இங்கு உள்ளன. சங்ககிரி கோட்டைக்கு செல்லும் வழியில் செயின்ட் ஆண்டனி தேவாலயம் உள்ளது.

ஊத்துமலை

சேலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மலையிலிருந்து சேலத்தின் முழு பரிமாணத்தையும் பார்த்து ரசிக்க முடியும்.

ஏற்காடு

தாவரவியல் பூங்கா

ஏற்காட்டில் உள்ள மிக முக்கியமான பூங்கா இது. அரிய வகைத் தாவரங்களோடு, சில உயிர்க்கொல்லித் தாவரங்களும் இந்தப் பூங்காவில் இருக்கின்றன.

படகு குழாம்

ஏற்காட்டில், இயற்கை அழகு சூழ பரந்து விரிந்திருக்கும் பெரிய ஏரி, பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஏரியில் அமைந்துள்ள படகு குழாம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாகும்.

பகோடா பாயிண்ட்

இந்த இடத்தில் பிரமிடு வடிவ நினைவுச் சின்னங்கள் இருந்துள்ளது. இதனால் பிரமிடு பாயிண்ட் என்றும் இதற்கு இன்னொரு பெயர் உண்டு. தற்போது, உள்ளூர் மலை வாசிகளால் புனிதமாக வணங்கப்படும் சிற்பமொன்று, நான்கு கல்லடுக்குகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன.

லேடிஸ் சீட்

இங்கிருந்து வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதையையும், அதில் செல்லும் வாகனங்களையும் பார்க்க வியப்பாக இருக்கும். ஏற்காடு மலையில் உள்ள மிகமுக்கியமான பார்வை இலக்கு இதுதான்.

இறையியல் பள்ளி

1945 ஆம் ஆண்டு டான் பாஸ்கோ சகோதரர்கள் இந்த இறையியல் பள்ளியைத் தொடங்கி உள்ளனர். கிறிஸ்தவ இறையியல் மாணவர்கள் தங்கிப் படித்து வருகிறார்கள்.

சேர்வராயன் காவேரியம்மன் கோயில்

கேரளப் பழங்குடியினர் வணங்கும் சேர்வராயன் கோயில், ராமசாமி எனவும் இந்தக் கடவுளை அழைக்கின்றனர். சேர்வராயன் மலையின் 5342 அடி உயரத்தில் அமைந்துள்ள குறுகிய இருண்ட குகையில் இக்கோயில் இருக்கிறது. மே மாதம் இங்கு நடைபெறும் திருவிழா புகழ்பெற்றதாகும். சேர்வராயன் சாமியும், காவேரி ஆற்றைக் குறிக்கும் காவேரி அம்மனும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

பொய்மான் கரடு

தரைப்பகுதியில் கிழக்குப் பக்கம், குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால், பாறைகளுக்கு நடுவே கொம்புகளுடன் ஒருமான் நிற்பது போலத் தோற்றம் தெரியும். இதனால் இந்த இடத்துக்கு பொய்மான் கரடு என்ற பெயர் வந்தது. சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் இந்த இடம் உள்ளது.