A- A A+     1800 - 425 - 31111
A- A A+ 1800 - 425 - 31111

தூத்துக்குடி

தூத்துக்குடி என்றாலே முத்துக் குளிப்பது நினைவுக்கு வந்துவிடும். இங்கு பாரம்பரியமான தொழில் உப்பு தயாரிப்பது. இது ஒரு துறைமுக நகரமாகும். சரக்குப் பேட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் இதுதான். தற்போது ஸ்பிக், ரசாயனத் தொழிற்சாலை மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை, மின் ஆலை போன்றவையும் உள்ளன.

பாரதியார் மணி மண்டபம்

மகாகவி பாரதியின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் இந்த மணி மண்டபம் அமைந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது. அப்போது அதற்கு மகாத்மாகாந்தி வாழ்த்து தெரிவித்தார். 1981இல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இந்த நினைவிடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

எட்டையபுரம்

தூத்துக்குடியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஊர், பாரதி பிறந்ததால் பெருமை பெற்றது. உமறுப் புலவருக்கும் இங்கு தனி நினைவிடம் உள்ளது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த ஊருக்கு, இலச நாடு என்பது பழைய பெயர். 1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என்ற பெயரால் இது அழைக்கப்பட்டு வருகிறது.

கட்டபொம்மன் நினைவுக் கோட்டை

ஆங்கில ஏகாப்தியத்தை எதிர்த்து முதலில் வாளெடுத்துப் போர்புரிந்த மாவீரன் கட்ட பொம்மன்தான். 1974 ஆம் ஆண்டு இவன் நினைவாக கட்டப்பட்ட நினைவிடம் இது. கட்டபொம்மன் தனது கோயிலில் தெய்வமாகக் கருதி வழிபட்ட ஜக்கம்மா கோயிலும் இங்கு உள்ளது. பார்வையாளர் நேரம்: காலை 8-1 மாலை 2-6 மணி வரை. கட்டணம் பெரியோர் ரூ1. சிறுவர்கள் 0.50 பைசா. தொலைபேசி 04632-2366149.

கயத்தாறு

இவ்வூரில் உள்ள புளிய மரத்தில்தான் 16.10.1799 அன்று மாவீரன் கட்டபொம்மனை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டுக் கொன்றது. இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் வீரத்துடன் இருப்பதற்காக மண்ணை உண்ணத்தரும் பழக்கம் உள்ளது.

குலசேகரப்பட்டினம்

திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழா புகழ் பெற்றது. இது ஒரு அழகிய கடற்கரை கிராமம்.

கொற்கை துறைமுகம்

தற்போது இது ஒரு சாதாரண கடற்கறை கிராமம்தான். ஆனால், 12 ஆம் நூற்றாண்டில், சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுகம் இருந்தது. திருச்செந்தூரிலிருந்து 29கி.மீ.தொலைவில் இருக்கும் இந்தத் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊரின் வரலாற்றை மேலும் கண்டறிய அகழ்வாராய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

ஒட்டப்பிடாரம்-வ.உ.சி. இல்லம்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்த ஊர்தான் ஒட்டப்பிடாரம். வெள்ளையருக்கு எதிராகச் சொந்தமாக சுதேசிக் கப்பல் வாங்கி ஓட்டிய மாபெரும் தியாகச் செம்மல். 12.12.1961 அன்று இவர் வாழ்ந்த இல்லம் நினைவகமாக தழிழக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 167.12 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நினைவிடத்தில், அவரது திருவுருவச்சிலை, அரிய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளன. முகவரி: 2/119, வ.உ.சி தெரு, ஒட்டப்பிடாரம்.

மணப்பாடு

இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இந்தத் தேவாலயத்தில் உள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் இதைச் சின்ன ஜெருசலேம் என்றும் அழைப்பதுண்டு. திருச்செந்தூரிலிருந்து 18 கி.மீ.தூரத்தில் வங்கக் கடற்கறை ஓரம் இது உள்ளது.

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்குதான் கண்ணபிரான் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டுள்ள வைணவத் திருத்தலம். இக்கோயிலின் மாபெரும் கோபுரமும் பெயர் பெற்றது. திருவேங்கட முதலியார் என்பவரால் கட்டப்பட்ட மண்டபத்தில், யாளிகள், யானைகள், வீரர்கள் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.

திருச்செந்தூர்

திருமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. தொலைபேசி: 0462-242270.

திருப்புளியங்குடி

திவ்யதேசம் என்று அழைக்கப்படும் இந்த ஊர், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2கி.மீ. தொலைவிலும் நகரத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி சாலையில் மூன்று திருப்பதிகள் உள்ளன. இவற்றில் காசினை வேண்டா பெருமாள் குடி கொண்டுள்ளார்.

திருக்கோலூர்

ஆழ்வார்த்திருநகர் மற்றும் தென் திருப்பேரைக்கு இடையில் திருக்கோலூர் உள்ளது. இங்கு செல்ல பரல்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

வாஞ்சி மணியாச்சி

ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ்துரையை, வாஞ்சி நாதன் இந்த இரயில் நிலையத்தில்தான் சுட்டான். அத்தோடு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். இந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில்தான், இந்த ஊரை வாஞ்சி மணியாச்சி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.

ஆதிச்சநல்லூர்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊர் தற்போது தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது.

அய்யனார் சுனை

திருச்செந்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் அய்யனார் கோயிலும் அருகில் ஊற்று ஒன்றும் உள்ளன. இதனை அய்யன் சுனை என்று அழைக்கிறார்கள்.